Monday, November 15, 2010

கைவிலங்கிட்டதை மறுப்பதா? முதல்வருக்கு அ.சவுந்தரராசன் மறுப்பு

சென்னை, நவம்பர் 14 :
போக்ஸ்கோன்ன் நிறுவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு பொது செயலாளர் கைது செய்யப்பட்டபோது கைவிலங்கிடப்படவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியதை அ.சவுந்தரராசன் மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு:  
சிஐடியு பொதுச்செயலாளராகிய எனக்கு கைவிலங்கிடப்படவில்லை என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியையும், வியப்பையும் அளிக்கிறது. கைவிலங்கை போலீசார் மாட்டியபோது ஏற்பட்ட மனவேதனையை விட இந்த மறுப்பு அதிக மனவேதனையைத் தருகிறது.

9-10-2010 அன்று நாங்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டோம். சிறையில் இருக்கும்போதே என் மீதும் சிஐடியு மாவட்டச்செயலாளர் முத்துக்குமார் உட்பட 12 பேர் மீதும் இன்னொரு வழக்கைப் போட்டு நாங்கள் அதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்படடது. இந்த வழக்கில் மீண்டும் ரிமாண்ட் செய்வதற்காக என்று 13-10-2010 அன்று உத்திரமேரூர் நீதிமன்றத்திற்கு செல்வதற்காக நாங்கள் அழைத்து வரப்பட்டோம்.


13-10-2010 அன்று பகல் 1.30 மணிக்கு வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த எங்களை இருவர் இருவராக நிற்க வைத்து கைகளில் விலங்கு மாட்டினார்கள். விலங்கு மாட்டுவது நீதிமன்ற வழிகாட்டலுக்கு எதிரானது என நான் கூறியபோது, எ°.பி. உத்தரவு என்று அதிகார தொனியில்  கூறித்தான் விலங்கை மாட்டினார்கள். விலங்கு மாட்டிய நிலையிலேயே வேனில் ஏற்றப்பட்டோம். வேன் சென்று கொண்டிருந்தபோது வழியில்தான் கைவிலங்கு அகற்றப்பட்டது. நீதிமன்றத்திற்குள் செல்லும்போது கைவிலங்கு இருக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது.

இது தொடர்பாக சிஐடியு மாநிலக்குழு டி.ஜி.பி-க்கு புகார் செய்தது. சிறையிலிருந்தபடி நான் டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பியுள்ளேன். மனித உரிமை ஆணையத்திற்கும் மனு அனுப்பியுள்ளேன்.

இதுவரை என்னிடமோ, விலங்கு மாட்டப்பட்ட மற்றவர்களிடமோ யாரும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் முதல்வர் தீர்ப்பு வழங்கி விட்டார். இது என்ன நீதி பரிபாலனம்? சிறையிலிருந்து அழைத்து வருபவனுக்கு போட்டோ ஆதாரமெல்லாம் இருக்க முடியுமா?

இதேபோல் 40 கார்களை உடைத்தோம், நொறுக்கினோம் என்று முதல்வர் கூறுவதும் தவறான செய்தி. வன்முறை பழி போடும் முயற்சி. இதுவரை போடப்பட்ட மொத்த வழக்குகளிலும் 40 கார்கள் உடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இல்லை. ஒருவேளை இனிமேல் வழக்கு வருமோ என்ற அச்சத்தையே முதல்வரின் கூற்று உண்டாக்குகிறது. வன்முறையாளர்கள் யார் என்பதை நாடறியும். போலீசின் கூற்றையும், முதலாளிகளின் கூற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு முதல்வர் உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளார்.

முதல்வர் அவர்களை டி.கே. ரங்கராஜனும்  நானும் சந்தித்த போது, கைவிலங்கு பற்றி நாங்களும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவர் ஏதோ இதுபற்றி விளக்கமளித்து நாங்கள் அமைதியாக இருந்தோம் என்று கூறுவது அவரது வளமான கற்பனை. இதை அரங்கேற்ற சட்டமன்றம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் கூற்று உண்மைக்குப் புறம்பான திட்டமிட்ட திசைதிருப்பும் வேலையாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது. போலீசார் விலங்கிட்டதை விட, இது மேலும் மோசமான செயல் என மனவேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment